“அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு” – வைகோ வலியுறுத்தல்

அரசுப் பணிகளில்  பெண்களுக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய உரிய சட்டத் திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில்…

அரசுப் பணிகளில்  பெண்களுக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய உரிய சட்டத் திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசுப் பொதுப் பணியாளர் சட்டத்தின் பிரிவு-26 இன் கீழ் 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீத பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிவிட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது முரணானது  எனவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதே நடைமுறைப்படி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதேசமயம் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையை மறுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொதுப் பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பிவிட்டு, அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு  நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அரசுப் பணிகளில்  பெண்களுக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய உரிய சட்டத் திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.