நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு எனக் கூறியவரை உதைத்தால் பரிசு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘ஜெய்பீம்’ சிறந்த திரைப்படம் எனவும் அதே சமயம் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில் உள்ள உண்மைத் தன்மையை நம்மால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் கூறினார்.
அந்தத் திரைப்படத்தில் அக்னிகுண்ட காலண்டரை காண்பித்தது தவறு என்றும் அந்த காட்சியை தவிர்த்திருக்கலாம் எனவும் அந்த காட்சியை பார்க்கத் தவறிவிட்டேன்; இல்லையெனில் நானே சூர்யாவிடம் நேரடியாக அந்த காட்சியை நீக்க சொல்லி பேசியிருப்பேன் என்றும் சீமான் தெரிவித்தார். என்றாலும் சூர்யாவை எட்டி உதைப்பவருக்குப் பரிசுத் தொகை என்று அறிவித்தவரை உதைத்தால் பணம் தருகிறேன் எனவும் சீமான் குறிப்பிட்டார்.








