“ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இருக்கை.. இது மோடியின் கியாரண்டி..” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் இருக்கை கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும், இது பிரதமர் மோடியின் கியாரண்டி எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி…

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் இருக்கை கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும், இது பிரதமர் மோடியின் கியாரண்டி எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது,

“கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறையில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை பிரதமர் மோடி செய்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்வேயின் திறன் அதிகரிக்கப்படும் என்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம். யார், எப்போது, எங்கு பயணிக்க விரும்பினாலும் அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட இருக்கை எளிதாக கிடைக்கும் சூழல் உருவாக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வே நிச்சயம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

அடுத்த 5 ஆண்டுகளில் பயணிகளுக்கான வசதிகள், அதிவேக ரயில்களை அதிகம் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். முந்தைய ஆட்சியில், அதாவது 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், ரயில் பாதைகள் அமைக்கும் பணி மிகவும் மெதுவாக இருந்தது. அந்த 10 ஆண்டுகளில் அவர்கள் 17,000 கிமீ தொலைவிற்கு மட்டுமே ரயில்வே பாதைகளை அமைத்தனர். அதேநேரம் மோடி பிரதமரான பிறகு 2014 முதல் 2024 வரை, 31,000 கிமீ தொலைவிற்கு புதிய ரயில் பாதைகளை அமைத்துள்ளோம்.

2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 5,000 கிமீ தொலைவிற்கு மட்டுமே ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. அதேநேரம் நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில், 44,000 கிமீ ரயில்பாதையை முழுமையாக மின்மயமாக்கிவிட்டோம். 2004-2014 வரையிலான காலத்தில் 32,000 ரயில் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் 54,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன” 

இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.