புத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி, மாஸ்டர் ,விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி, மாஸ்டர் ,விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வாசிக்கும் திறனை வளர்க்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 46-வது சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

17-நாட்கள் நடைபெறும் இந்த பிரமாண்டமான புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் சேர்த்து, மொத்தம் ஆயிரம் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதன் முறையாக திருநங்கையினரின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளிவந்துள்ள மாநகரம்,கைதி, மாஸ்டர் ,விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதையை புத்தகமாக்கி புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் வாங்கி சென்று படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகங்களை பொதுமக்களும் மிக ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக இயக்குனராக விரும்பும் வருங்கால இளம் இயக்குனர்கள் பலரும், இந்த புத்தகத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர். சிலர் நான்கு புத்தகங்களையும் வாங்கி செல்கின்றனர். இது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதனுடன் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி நடிகர் விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளிவந்த 96 மற்றும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களின் திரைக்கதையும் புத்தகமாக்கி இந்த புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.