பத்தா
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் பத்தா. இயக்குநர் அட்லீ தயாரித்திருக்கிறார். 1980களில் கதை நடக்கிறது. சென்னையை அடுத்த காலடிபேட்டை ஏரியாவில் சாராய வியாபாரி, தாதாவாக இருக்கிறார் பத்தா என்ற விஜய் சேதுபதி. அவரின் அடிதடி, ரவுடித்தனத்தைப் பார்த்து பயப்படுகிறான் சிறுவன் சாய். ஆனால், சூழ்நிலை காரணமாக அரசு பள்ளி பாத்ரூமில் அவரை 8 நாட்கள் பூட்டி வைத்து, தினமும் பொறை மட்டும் சாப்பிடக் கொடுக்கிறான். அதிலிருந்து வெளியே வரும் விஜய் சேதுபதி, ‘‘என்னை அடைத்து வைத்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன்’’ என்று பொங்குகிறார். அதேசமயம் நடந்தது தெரியாமல், ‘என்னைக் காப்பாற்றியது சிறுவன் சாய்தான்’ என அவன் மீது பாசத்தையும் பொழிகிறார். கடைசியில் அவருக்கு உண்மை தெரிந்ததா? சாய்க்கு என்ன ஆனது? அவரைப் பாத்ரூமில் சிறுவன் அடைத்து வைத்தது ஏன்? இதுதான் பத்தா கதை.
ஒரு தாதா, ஒரு சிறுவன் இடையேயான உறவு, பயம், பாசத்தைப் புதுக் கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதை குழந்தைகள் பார்வையிலும், ஒரு ரவுடி பார்வையிலும் விவரித்திருப்பது சிறப்பு. பத்தா என்ற ரவுடியாக ஆரம்பத்தில் அமர்க்களம் பண்ணுகிறார் விஜய் சேதுபதி. மனைவி லிஜோமோல், மகள் மீது பாசமாக இருக்கிறார். ஸ்கூல் பாத்ரூமில் மாட்டிக்கொண்டு தவிக்கும்போது ஆளே மாறுகிறார். வெளியே இருப்பது ஒரு சிறுவன் எனத் தெரியாமல் கோபத்தில் கத்துவதும், கடைசியில் நான் எவ்வளவு பெரிய ஆள், எனக்கு பொறை கொடுக்குற புலம்புவதும் செம. வெளியே வந்தவுடன் இப்படி செய்தது யார் எனப் பெரிய, பெரிய ரவுடிகளைப் பார்த்து சந்தேகப்படுவது, கடைசியில் சில விஷயங்கள் தெரிந்தவுடன் அவர் மாறுவதும் பரபர. கடைசியில் நான் ஒரு பாடகர் எனப் புதுக் கதை விடுவதும், பாட்டு பாடி டார்ச்சர் செய்வதும் யாரும் எதிர்பாராத சீன்கள். படம் முழுக்க தான் தேர்ந்த நடிகர் என்பதை ஆங்காங்கே நிரூபித்து, பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் ஒருவித காமெடி டோன் இருப்பதும் பிளஸ்.

சிறுவன் சாய் படத்தில் இன்னொரு ஹீரோ. அவனின் பயம், தவிப்பு, தெரியாததனமாக ஒரு விஷயத்தைச் செய்து பதறுவது ஆகியவை குழந்தைகளின் உலகத்தை அழகாகக் காண்பிக்கிறது. அதை அதீத நடிப்பைக் காண்பித்து சினிமாத்தனம் ஆக்காமல், இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். தான் மாட்டிவிடுவேனா என அவன் தவிக்கும் இடங்கள் பிரமாதம். கடைசியில் அழுதுகொண்டே விஜய் சேதுபதியிடம் சில உண்மைகள் சொல்வது டச்சிங். அந்த இடத்தில் நம்மையும் அழ வைத்துவிடுகிறான். சாய் ப்ரித்விருக்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கொடுத்து பாராட்டலாம். இந்தக் கதையை சீரியஸாகக் கொண்டு செல்லாமல், கொஞ்சம் லேசான டோனில், திருப்பங்கள், சில கேரக்டர் வரவால் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருப்பது பிளஸ்.
விஜய் சேதுபதி மனைவியாக வரும் லிஜோமோலின் இயல்பான நடிப்பு, சாய் பெற்றோர்களாக வரும் ஹரி, சாண்டி கேரக்டர், விஜய் சேதுபதி நண்பர்களின் பின்னணி, மற்ற ரவுடிகள் பாத்திரம் ஆகியவை கதையை அழுத்தமாக மாற்றுகின்றன. ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும் மெல்லிய உணர்வுகளை, மனிதநேயத்தை, குழந்தைகளின் வாழ்வியலைச் சொல்லும் இந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு பொக்கே. அதை மிகைப்படுத்தல், பில்டப், ஹீரோயிசம் இல்லாமல் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். கிளைமாக்ஸை இழுத்திருக்க வேண்டாம். சில சீன்களில் தேவையற்றது என சில குறைகள் இருந்தாலும், பத்தா படத்தின் கதை, அதில் நடித்தவர்கள் முகம், சில சீன்கள் பல ஆண்டுகள் மனதில் நிற்கும்.
அன்பில் அவன்
சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் ஒர்க் பண்ணும் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஜோடிக்கு சொந்தமாக ஹோம் ஸ்டே ஹோட்டல் தொடங்க வேண்டும் என ஆசை. அதற்காக இருப்பதை விற்று, கடனை வாங்கி ஒரு மலைவாழ் ஸ்தலத்தில் ஹோட்டல் தொடங்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த ஏரியா எம்.எல்.ஏ., ஒரு போலீஸ்காரர், இன்னும் சிலர் அதைத் தடுக்கிறார்கள். அசோக் செல்வன், ப்ரீத்திக்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பொங்கி எழ, என்ன நடக்கிறது என்பது அன்பில் அவன் கதை.

முதற்பாதி முழுக்க இருவரின் அன்பு, கஷ்டம், காதல், ஹோட்டல் தொடங்கும் கனவு என செல்கிறது. தனியார் ஹோட்டலில் உயர் அதிகாரிகளால் இருவரும் அவமானப்படுவது மனதை உலுக்குகிறது. அடுத்து ஹோட்டல் தொடங்கச் செய்யும் ஏற்பாடுகள், அதற்கு ஏற்படும் தடைகளைச் சமாளிக்கும் விதம் அருமை. பிற்பாதி முழுக்க வில்லன் டீமுடன் பிரச்னை, சண்டை, அடிதடி என செல்கிறது. பணக்கஷ்டத்தில் தவிப்பவராக, நினைத்த கனவை முடிக்க முடியாதவராக, மனைவியிடம் அன்பைச் செலுத்துபவராக நன்றாக நடித்திருக்கிறார். அவரின் காதல் காட்சிகள் கியூட். இரண்டாம் பாதியில் ஆக்ஷனில் பின்னி எடுத்திருக்கிறார். அதேபோல், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பு, கேரக்டர், போலீஸ், எம்.எல்.ஏ. அட்டகாசம் பார்த்து அவர் கோபப்படும் இடங்களும் அருமை. கவுரவ வேடத்தில் ரேவதி வருகிறார்.
வில்லத்தனம் பிடித்த எம்.எல்.ஏ.வாக கதிர்பாலும், தப்பான போலீஸாக மகாவும், சிக்கலில் மாட்டிவிடும் வக்கீலாக சாபுவும் வருகிறார்கள். இவர்களுக்கும் ஹீரோவுக்குமான சீன்கள் விறுவிறுப்பு. ஒரு சொந்தமாகத் தொழில் தொடங்க இவ்வளவு பிரச்னைகளா? இத்தனை பேரை சமாளிக்கணுமா? அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பணத்தாசை இப்படியா என பல இடங்களில் வெளிப்படையாகச் சொல்லி ஃபீல் பண்ண வைக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் பெரும்பகுதியை ஒரே ஒரு சண்டைக் காட்சியில் கொண்டு சென்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அந்த நீளமான சண்டைக் காட்சி போரடிக்கிறது. ஆனாலும், புதுக் கதைக்களம், கோவிந்த் வசந்தா இசை, அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பால் அன்பில் அவன் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது.
சிக்மா
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், சம்பத், பிரியா அப்துல்லா, ஜாக் ஜேபி, ராஜு சுந்தரம் நடித்த டான், ஹீரோ மோதல் கதை சிக்மா. தாய்லாந்தில் ஒரு பெரிய கண்டெய்னரில் ஆயிரம் கோடி பணத்தைப் பதுக்கி வைக்கிறார் போதை மருந்து கும்பல் டான் சம்பத். அதைத் திறக்கும் சாவி ஹீரோ கையில் சிக்குகிறது. அதை மீட்க சம்பத், இன்னும் சில டீம் சண்டைபோடுகிறார்கள். என்ன நடக்கிறது? இதுதான் சிக்மா கதை.
ஹீரோ சந்தீப் கிஷன் கடனில் தத்தளிக்கிறார். அவரிடம் ஒரு பென்டிரைவ், சாவி கிடைக்க, அவர் வாழ்க்கை மாறுகிறது. சூதாட்ட விடுதி நடத்தும் ஷிவ் பண்டிட்டுக்கும் அவருக்கும் பிரச்னை வருகிறது. இதற்கிடையில் தாய்லாந்தில் இருந்து சம்பத் வர, இன்னும் பிரச்னை, சண்டை பெரிதாகிறது. கடைசியில் தாய்லாந்து பணம் யாருக்குச் சொந்தமானது என்பது கிளைமாக்ஸ். ஹீரோ சந்தீப் நடிப்பு, ஆக்ஷன் ஓகே. ஆனால், காதல் காட்சிகளில் வலு இல்லை. ஹீரோயின் பிரியா அப்துல்லாவும் ஏமாற்றியிருக்கிறார். சம்பத், ஷிவ், ஜாக் ஜேபி என 3 வில்லன்கள், சேஸிங், சண்டை என படம் செல்கிறது.

பாடல் காட்சி, சென்டிமென்ட் காட்சிகளில் ஈர்ப்பு இல்லை. பெரிய பட்ஜெட் படம், நிறைய நடிகர்கள் இருந்தும் சுமாரான திரைக்கதை, பல படங்களில் பார்த்த பல கோடி பணம், சாவி, போதை மருந்து கடத்தல், வில்லன் போன்ற காட்சியமைப்புகளால் படம் தடுமாறுகிறது. முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம். ஆனால், அதை படம் பூர்த்தி செய்யவில்லை.
ஏழு கடல் ஏழு மலை
கற்றது தமிழ், தங்கமீன்கள், பேரன்பு, பறந்து போ போன்ற படங்களை இயக்கிய ராமின் அடுத்த படம். ஒரு தீபாவளி நாளில் ஓடும் ரயிலில் 8 ஆயிரம் ஆண்டுகள் வாழும் அதிசயப் பிறவியான நிவின் பாலியும், 8 ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் திரும்பும் சூரியும் அடிக்கடி விவாதம் செய்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்கிறார்கள். கடைசியில் யார் ஜெயித்தார்கள்? என்ன கற்றுக்கொண்டார்கள் என்பது கதை. இதில் ஒரு எலியும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
படத்தின் பெரும்பகுதி ஆளே இல்லாத ஓடும் ரயிலில் நடக்கிறது. நிவின் பாலி யார்? அவர் பின்னணி, அவருக்கும் அஞ்சலிக்குமான காதல், பிரச்னைகளை ஒரு பகுதி சொல்கிறது. சூரி யார்? அவருக்கும், நிவின் பாலிக்கும் இடையேயான ரயில் சண்டையை இன்னொரு பகுதி சொல்கிறது. இடையில் எலி வந்து தொந்தரவு செய்கிறது. அதனாலும் சண்டை. கடைசியில் சில வாழ்க்கைத் தத்துவங்கள், தீர்வுகளுடன் படம் முடிகிறது.

ராம் இயக்கிய மற்ற படங்கள் மாதிரி இல்லாமல், இது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு மட்டும் பிடித்த படமாக இருக்கிறது. நிவின் பாலி தோற்றம், கோபம், அவர் காதல் பகுதிகள் ஓகே. காடு சம்பந்தப்பட்ட காட்சிகள், ஒளிப்பதிவு, அஞ்சலியுடனான சீன்கள் குளுமை. என்ன நடக்கிறது, யாரிடம் மாட்டியிருக்கிறோம் எனத் தெரியாமல் சூரி தவிக்கும் இடங்கள் ஓகே. ரயில் காட்சிகளை ஏகாம்பரம் கேமரா அழகாகக் காண்பித்திருக்கிறது. யுவன் இசையும் ஓகே. காதல், சக உயிர் மீதான அன்பு, உதவும் குணம் என விஷயங்களை கதை மறைமுகமாகச் சொல்கிறது. ஆனாலும், நீளமான, குழப்பமான காட்சிகளில் ரசிகர்கள் குழம்பி நிற்கிறார்கள். வழக்கமான படம் மாதிரி இல்லாமல், வழக்கமான ராம் படம் மாதிரி இல்லாமல், கதையும், கதாபாத்திரங்களும், சொல்லவரும் விஷயங்களும் தெளிவில்லாமல் அல்லது வெகுஜன மக்களுக்குப் புரியாமல் இருப்பது மைனஸ்.
டோன்ட் டிரபிள் த டிரபிள்
இரண்டு நாளில் 25 லட்சம் பணத்தை தாதா ஒருவரிடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பகத் பாசில். அப்போது குழந்தை நட்சத்திரம் சாராவைக் கடத்தி, அவர் வீட்டில் பணம் கேட்டு மிரட்டலாம் எனத் திட்டம் போடுகிறார். சாராவைக் கடத்திப் பணம் பறிக்க சில முயற்சிகள் செய்யும்போது, சாரா ஒரு பேய் என பகத்துக்குத் தெரிகிறது. ஆனால், தான் இறந்தது தெரியாமல் பகத்திடம் பாசமாகப் பழகுகிறார் சாரா. குற்றவாளி என நினைத்து பகத்தை போலீஸ் துரத்த, அவரோ சாரா பெற்றோர்களுக்கு என்ன ஆனது எனத் தேடுகிறார். சாராவுக்குத் தான் யார் என்ற உண்மை தெரிந்ததா? அவர் பெற்றோர்கள் என்ன ஆனார்கள் என்பது கிளைமாக்ஸ். எஸ்.எஸ். ராஜமௌலி மகன் கார்த்திகேயா தயாரிக்க, ஷஷாங்க் யெலேட்டி இயக்கியிருக்கிறார்.
பேயைக் கடத்தும் ஒரு திருடனின் கதை என்றாலும், அதை கமர்ஷியலாகச் சொல்லியிருக்கிறார்கள். வழக்கமான பேய் படம் மாதிரி பயம், திகில், பழிவாங்கல், துரத்தல் இல்லாமல் ஜாலியாகக் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பகத் பாசில், குழந்தை நட்சத்திரம் சாரா இடையேயான பயணம், பாசம்தான் படத்தின் கரு. அதை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. எந்த இடத்திலும் பேய் பயம் இல்லை. குழந்தைகளும் ரசிக்கலாம்.

வில்லத்தனமான ரோலில் நடித்து வந்த பகத் பாசில், இதில் ஊதாரியாக, ஏமாற்றுப்பேர்வழியாக வருகிறார். சாராவை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். ஆனால், அவள் ஒரு பேய் எனத் தெரிந்தவுடன் மனம் மாறுகிறார். கடைசியில் அடி உதை வாங்கி அவளின் பெற்றோர்களைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டு, தானும் ஒரு தியாகம் செய்கிறார். அவர் கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். அவர் நடிப்பு பற்றி சொல்ல வேண்டாம். குழந்தை நட்சத்திரமாக வரும் சாரா தேவதை மாதிரி துறுதுறுவென இருக்கிறார். அப்பாவியாக அவர் பேசுவது, கோபப்பட்டுப் பொங்குவது, கடைசியில் பெற்றோர் நிலை பார்த்துத் தவிப்பது என மாறுபட்ட பேய் நடிப்பைத் தந்திருக்கிறார். குழந்தை கடத்தல், பணம் கேட்டு மிரட்டும் இடங்கள், சாராவின் பவர், பகத் பாசிலின் நடிப்பு இதெல்லாம் கதைக்கு பிளஸ். படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார் பகத், கிளைமாக்ஸில் ஒரு காரியம் செய்து கலங்க வைக்கிறார்.
தெலுங்குப் படம் என்பதால், ஐதராபாத்தில் கதை நடக்கிறது. பல தெலுங்கு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழ் டப்பிங் செட்டாகி இருக்கிறது. வழக்கமான ஹீரோயின், ஆடல், சாங், காமெடி இல்லை. ஒரு குழந்தை பேய், திருடனின் பாசத்தைச் சொல்லும் உணர்வுபூர்வமான கதை. டோன்ட் டிரபிள் த டிரபிள் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் கவர்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் கொஞ்சம் நீளம் என்றாலும் நெகிழ்ச்சி. நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது.
கிட்டி
நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அசோக் குமார், யுகன் நடித்த திரில்லர் படம் கிட்டி. என் காதலி, ஒரு ரவுடியை நானே கொலை செய்தேன் என போலீசில் சரண்டர் ஆகிறார் ஆட்டோ டிரைவரான ஹீரோ அசோக். ஆனால், அந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுகனுக்கு சந்தேகம் வர, இன்னும் விசாரிக்கிறார். அசோக் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிய வருகிறது. அவர் கொலைகள் செய்தாரா? பின்னே யார் செய்தது? அவர் சரண்டர் ஆனது ஏன் என்பது கிட்டி படத்தின் கரு. கிரைம் திரில்லருடன் கொஞ்சம் உளவியலும் சேர்த்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

எந்தச் சம்பவம் நடந்தாலும், அதைத் தன் பார்வையில் தன்னுடன் இணைத்துப் பார்க்கும் கேரக்டர் கொண்டவராக அசோக் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் நடிப்பு பிளஸ். அவர் காதலியாக சங்கவி வருகிறார். மற்ற துப்பறியும் கதைகளில் இருந்து உளவியல் கலந்த இந்தக் கதை மாறுபட்டதாக இருக்கிறது. போலீஸ் யுகன் நடிப்பு, அசோக் நண்பனாக வரும் அர்ஜூனா துரைசாமி கேரக்டர், நீதிபதி ஒய்.ஜி. மகேந்திரன் கேரக்டர் அழுத்தமாக இருக்கிறது. இடைவேளை வரை சஸ்பென்ஸ், அடுத்து திருப்பம், விசாரணை என கதையோட்டம் வேகமாக இருக்கிறது. ஒரு மனநிலைப் பிரச்னையை கொலையாளி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும், அதை போலீஸ் கண்டுபிடிப்பதும் புதுவித களம். சங்கவி, நிஷா, சிமு அத்வானி என 3 பெண் கேரக்டர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
மனநலம், காதல், கிரைம், திருப்பங்கள், விசாரணை நிறைந்த படமாக கிட்டி ஓகே. சில இடங்களில் குழப்பத்தைத் தவிர்த்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.
மீனாட்சிசுந்தரம், சிறப்புச் செய்தியாளர்




