‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு இடைக்கால தடைக் கோரி வழக்கு!

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் 12,695 அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தனியார் பேருந்து உரிமையாளர்களின் தொழிலை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி, தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்தத் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்ததன் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்காமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வில் அக்டோபர் 5 -ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.