பள்ளி மாணவி உயிரிழப்பு ; போலீசார் தீவிர விசாரணை

திருச்செங்கோடு பகுதி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்  கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…

திருச்செங்கோடு பகுதி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்  கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (45) மற்றும் அவரது மனைவி சந்தனமாரி (35). இவர் தச்சுத் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 11ம் வகுப்பு படிக்கும் அர்ஜுன் என்ற மகனும் 9ம் வகுப்பு படிக்கும் அர்ச்சனா என்ற மகளும் உள்ளனர். இதில் மகள் அர்ச்சனா திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில் வகுப்பறையிலிருந்த அர்ச்சனா திடீரென வாந்தி வருவதாகக் கூறி வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற அவர் பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்தார்.

இரண்டாவது மாடியிலிருந்து குதித்ததில் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு வயிற்றுப் பகுதியில் பலமாக அடிபட்டுக் கிடந்த அர்ச்சனாவைக் கண்ட ஆசிரியர்கள் அவரை உடனடியாகத் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதனையறிந்த திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணையை மேற்கொண்டார். மேலும் உயிரை மாய்த்துக்  கொண்ட அர்ச்சனாவின் பள்ளிப்பையில் ஒரு கடிதம் இருந்ததாகவும் அதை காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.