கோவை அருகே ஒட்டகப்பண்ணையை குடும்பத்துடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள், அங்கே ஒட்டகப்பாலில் தயாரிக்கப்படும் தேநீரையும் ருசித்துச் செல்கின்றனர்.
கடந்த 2000ஆம் ஆண்டில் வெளிவந்த “வெற்றிக் கொடி கட்டு” என்ற தமிழ் திரைப்படத்தில் டீ மாஸ்டரிடம் ஒட்டகப் பாலில் டீ போடுமாறு நடிகர் வடிவேலு கூறும் நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சியை மெய்ப்பிக்கும் வகையில் கோவையில் ஒட்டகப் பால் டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சூலூரையடுத்த நீலம்பூர் புறவழிச் சாலையில் ஒட்டகப் பாலைக் கொண்டு பால் பொருட்கள் விற்பனை செய்யும் பண்ணையை மணிகண்டன் என்பவர் தொடங்கியுள்ளார். இந்த பண்ணையில் ஒட்டகங்கள் மட்டுமின்றி குதிரை, முயல், வாத்து, கோழி ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் ஒட்டகத்திலிருந்து பால் கறக்கப்பட்டு நேரடியாகத் தேநீர் விற்பனையும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஒட்டகப் பண்ணையை பார்வையிட வரும் பொதுமக்களிடம் 20 ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து பண்ணை உரிமையாளர் மணிகண்டன் பேசியபோது, ஒட்டகப் பாலை கொண்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், பண்ணையைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்திலிருந்து 6 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டது எனவும், எல்லா சூழலிலும் வாழக்கூடிய வகையில் ஒட்டகங்கள் இருப்பதால் இங்கு சிரமமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இதுமட்டுமின்றி ஒட்டகம் மற்றும் குதிரை சவாரி செய்யும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.