நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், போக்குவரத்து வசதியில்லாமல் தனித்துவிடப்பட்டள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி, நவீன இந்தியா, நாகரீக வளர்ச்சி என்பதெல்லாம், பொய் வார்த்தைகள் என்பதை நிரூபிக்கும் வகையில் தனித்துவிடப்பட்ட தீவுகள்போல் காட்சியளிக்கின்றன இந்த கிராமங்கள். நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், போக்குவரத்து வசதி இல்லாமல் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று தங்களது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே காக்கநல்லூர், முறுக்கேறி, ஆண்டித்தாங்கல், நெமிலிபாட்டு, அழிசூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நெல், வாழை, வேர்க்கடலை, எள், உளுந்து போன்றவை இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் விளைபொருட்களைக் கொண்டுசெல்லவோ, தனியார் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லவோ, பேருந்து வசதி இல்லை என்கிற இந்த மக்களின் வலி நிறைந்த குரல், நவீன இந்தியா என்கிற வாதத்தையே முறித்துப் போடுகிறது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பாதுகாப்பாக வீடு வந்து சேறும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் கிராம மக்கள். அவசர மருத்துவ சிகிச்சை என்றால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், தங்களது கிராமங்களுக்குப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைக்கின்றனர்.









