டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

டாஸ்மாக் கடைகள்  செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டுமென டாஸ்மாக் பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா 2வது அலைப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம் போல 12 மணிக்கு திறந்து இரவு…

டாஸ்மாக் கடைகள்  செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டுமென டாஸ்மாக் பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலைப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம் போல 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு எழுவதோடு, கடந்த வருடத்தைப் போல டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகின்றன. 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் திருத்துறைப்பூண்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக  டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில்  தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்,  அரசுக்கு என்ன மாதிரியான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்செல்வன்,  “கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாகியுள்ள நிலையில் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து செல்லும் டாஸ்மாக் கடைகளுக்கு  எந்த கட்டுப்பாடு அறிவிப்பும் இல்லாதது டாஸ்மாக் பணியாளர்கள் இடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.  

கடந்தாண்டு பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தபோது பத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டிய அவர்,  “தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை பிற்பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணி வரை செயல்படுமாறு விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். சுகாதாரமற்ற பார்களை உடனடியாக மூட வேண்டும் என 10 நாட்களுக்கு முன் தலைமைச் செயலாளரிடம் கடிதம் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

 அரசு இனிமேலாவது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், பார்களை மூடவேண்டும், சமூக இடைவெளியை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளில் டோக்கன் முறையை செயல்படுத்த வேண்டும் எனவும் திருச்செல்வன் வலியுறுத்தியுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.