சென்னையில் மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு, வலி நிவாரண மருந்துகளை பெருமளவில் வாங்கி, மருத்துவரின் பரிந்துரை சீட்டுகள் இல்லாமலும், முறையான விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மருந்தகத்தை பூட்டி, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதையும் படியுங்கள் : சீர்காழி : மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு – விவசாயிகள் வேதனை
அம்மருந்தகத்தின் மீது மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே, மருந்துகளை மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அக்கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
– வேந்தன்




