தமிழக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி ஆளுநர் அர்லேக்கர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 19ம் தேதி பேரவையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அணைக்கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் விஜய்க்கு சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பேசியவர் “முதலமைச்சர் விஜய் 52-வது வயதை பூர்த்தி செய்து 53-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரராக விளங்கும் முதலமைச்சர் விஜய், பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும். தலைமைக்கு அழகு முதலமைச்சர் விஜய்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் களத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மக்கள் பலத்தால் வென்று காட்டியவர். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் படைத்து ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்-அமைச்சர் விஜய், நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்”. இதனை தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் இன்றும் தொடர்கிறது.




