தமிழக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி ஆளுநர் அர்லேக்கர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 19ம் தேதி பேரவையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அணைக்கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூடியதும் முதல் அமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் முகம்மது பர்வேஷ் விதி எண் 110 – கீழ் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் பேசுவதற்கு முன்பாக நாங்கள் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. சபாநாயகர் பிறகு வாய்ப்பு தருகிறேன் என்று கூறியும் என்று கூறியும் ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே அமைச்சர் அரசு தரப்பு விளக்கத்தை அளித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.




