இயற்கை உரமென்று களிமண் விற்று மோசடி?

இயற்கை உரம் என்ற பெயரில் களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றியதாக கோவில்பட்டி பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், புரட்டாசி ராபி பருவத்திற்கு தயாராகி…

இயற்கை உரம் என்ற பெயரில் களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றியதாக கோவில்பட்டி பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், புரட்டாசி ராபி பருவத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த பருவத்தில் உளுந்து,வேர்க்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.

இந்நிலையில் பயிர்களுக்கு முதற்கட்டமாக இடப்படும் டிஏபி உரத்திற்கு இணையான இயற்கை கடற்பாசி உரம் இருப்பதாக ஒரு கும்பல் விவசாயிகளை அணுகியுள்ளது. இதை உண்மையென நம்பிய கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் கடன் பெற்று, 50 கிலோ கொண்ட அந்த உர மூட்டையை 1300 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். விவசாயிகள் ஆவலுடன் வாங்கிய அந்த மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தபோது, உரத்திற்குப் பதிலாக வெறும் களிமண் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த விவசாயிகள், போலி உரம் விற்ற நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு போதுமான உரங்களை கையிருப்பில் வைத்து தங்களுக்கு வழங்க வேண்டும். தட்டுப்பாடு நிலவும் சூழலில் கடைகளுக்கு சென்று வாங்கும் பொழுது கடை வியாபாரிகள் மருந்து வாங்கினால் தான் ஒரு மூட்டை தருவோம் என்று தங்களுக்கு நெருக்கடி கொடுப்பதாலும் பல்வேறு சூழலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. ஆதலால் தான் தாங்கள் இம்மாதிரியான உரங்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது எனவும் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு முன்கூட்டியே உரங்களை கையிருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கினால் இம்மாதிரியான பிரச்சனை நிலவாது எனவும் தெரிவித்தனர்.

போலி உரம் விற்பனை தொடர்பாக விவசாயிகளிடம் புகார் பெறப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் வாங்கிய உரம் பரிசோதனை கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆய்வு முடிவில் போலியான உரம் என தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடைகளில் உரம் வாங்கும்போது, மருந்துகளை வாங்கினால் தான் உரம் தருவோம் என கடைக்காரர்கள் நெருக்கடி ஏற்படுத்துவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், வெளிநபர்களிடம் உரம் வாங்கும் போது ஏமாற்றப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதாக கூறுகின்றனர். பருவக்காலங்களில் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.