நெல்லை, நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 475 மாணவிகள் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் துப்புரவுப் பணி, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதன் காரணமாக தினமும் மாணவிகள் 4 பேர் வகுப்பறைகளை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். துப்புரவுப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இச்சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மேலும், பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வகம், கழிப்பறை வசதி இல்லை. சுற்றிலும் செடி, புதர்கள் சூழ்ந்திருப்பதால் வகுப்புக்குள் பாம்புகள் நுழைகின்றன என்றெல்லாம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல, தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.
கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்வர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலைமைக்கு நாங்குநேரி பள்ளி சிறு உதாரணம்தான். எனவே, பணியாளர் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








