இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்தம் – 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தெற்கு கேரள கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அது இன்று காலை 5.30 மணிக்கு, தென்மேற்கு வங்கக்கடலில், வடகிழக்கு இலங்கை கடற்கரைக்கு அப்பால், வடக்கு அட்சரேகை 8.8° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 81.6° அருகே மையம் கொண்டிருந்தது.

இது திரிகோணமலைக்கு (இலங்கை) கிழங்கு-வடகிழக்கே சுமார் 50 கி.மீ., மட்டக்களப்பிற்கு (இலங்கை) வடக்கே 120 கி.மீ., பொத்துவில்லுக்கு (இலங்கை) வடக்கே 210 கி.மீ., காரைக்காலுக்கு (புதுச்சேரி) தென்கிழக்கே 310 கி.மீ. மற்றும் சென்னைக்கு (தமிழ்நாடு) தெற்கு-தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் இருந்தது.

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று, நண்பகல் திரிகோணமலைக்கும் – யாழ்ப்பாணத்திற்கும் இடையே வடக்கு இலங்கை கடற்கரையை ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.