காசா பகுதியில் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலில் பலி எண்ணிக்கை 4000-ஐ நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 10வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.
காஸாவில் ஹமாஸ் படையினரின் நிலைகளைக் குறி வைத்து, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த மோதலில் இஸ்ரேலியர்கள் 1,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 3,621 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் பலி எண்ணிக்கை 2,670 ஆக உயர்ந்துள்ளன. 9,600 பேர் காயமடைந்துள்ளதாக பாலாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசாவில் 455 இறப்புகளும், 856 காயமடைந்தவர்களும் பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் விளைவாக குடியிருப்புப் பகுதியிலிருந்து மருத்துவமனைகளுக்குச் செல்லும் சாலைகளில் ஏற்பட்ட சேதத்தின் விளைவாக மீட்புப் பணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அஷ்ரஃப் அல் குத்ரா கூறினார்.
இன்று காலை நிலவரப்படி 6 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் ஐ.நா. நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







