தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. மழையில் சேதமடைந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களை இதுவரை வளர்த்தெடுப்பதற்காகவே ஒவ்வொரு உழவரும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்திருக்கும் நிலையில் தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் போதுமானதல்ல.

டித்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதாகவும், அவற்றுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் 2.11 லட்சம் ஏக்கர் பயிர்கள் மட்டுமே மழை நீரில் மூழ்கியிருப்பதாகவும், அவற்றில் பாதிப்பின் அளவு கணக்கிடப்பட்டு ஏக்கருக்கு ரூ.8,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், அதற்கான இழப்பீடு இன்று வரை அறிவிக்கப்படவில்லை.

இப்போதும் 2.11 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கியிருந்தாலும், பாதிப்பின் அளவு கணக்கிடப்பட்டு தான் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, இந்த முறையும் இழப்பீடு வழங்காமல் உழவர்களை திமுக அரசு ஏமாற்றி விடுமோ? என்ற ஐயம் எழுகிறது. அவ்வாறு செய்தால் அது மன்னிக்க முடியாத துரோகமாக இருக்கும். சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு சேதம் உறுதி செய்யப்பட்டாலும் கூட, ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டும் தான் இழப்பீடாக வழங்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

சம்பா, தாளடி பயிர்களுக்கான விதை நெல் வாங்கி, நாற்று வளர்த்து, அதை பிடுங்கி நடவு செய்வதற்கே ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், அதை விட குறைவான இழப்பீடு வழங்குவது அநீதியானது ஆகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40 ஆயிரம் ஆகும். இதுவரை ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகியிருக்கிறது. இன்னும் 30 முதல் 40 நாள்களில் இந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டால் ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

நெய்வேலியில் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சில ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி நிறுவனம் அழித்த போது, அதற்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அடிப்படையாக வைத்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.