சென்னை வடபழனி முருகன் கோயிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தரமற்ற பிரசாதங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், வடபழனி முருகன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வடபழனி சாஸ்திரி நகரில், சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும், அங்கு பாக்கெட் செய்யப்பட்டு, அவை கோவிலுக்கு கொண்டு வரும் தகவலை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனத் தொடர்ந்து உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்ட போது, அப்பகுதி சுகாதாரமற்ற முறையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் உணவு தயாரிப்பதற்கான உரிய உரிமம் பெறாமல், உணவுக்கூடம் நடத்தி வந்தததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து அங்கு வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பிரசாத பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தரமற்ற பிரசாதங்களை தயாரித்து, விற்பனை செய்ததாக ஸ்ரீனிவாசனுக்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், அவர் ஒப்பந்தமின்றி கோயிலில் பிரசாதம் விற்பனை செய்து வருவது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் பிரசாதம் தரமற்ற முறையில் தயாரிக்கபடுவதால் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








