‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை படித்துவிட்டு முதலமைச்சரை வாழ்த்திய ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவரது சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த அந்த விழாவில் ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிட்டார் ராகுல்காந்தி. முதலமைச்சரின் முதல் புத்தகத்தை ராகுல்காந்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். முதலமைச்சரின் சுயசரிதை என்பதால் வெளியிட்டிற்கு பின்பு இந்த புத்தகம் அதிகப்படியானவர்களால் வாங்கப்பட்டது. பல இடங்களில் அதிகம் விற்பனையாகும் புத்தகமாகவும் ’உங்களில் ஒருவன்’ புத்தகம் இருந்துவருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை முழுமையாக படித்த நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்த நண்பருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், “உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.







