இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். குறைவான பவுண்டரி தூரம் கொண்ட இந்த மைதானத்தில் ஆடுகளமும் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழை பொழிந்தனர். ரோகித், கில் சதம் 4-வது ஓவருக்கு பிறகு அதிரடி வேட்டையை ஆரம்பித்த ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டனர்.
பெர்குசனின் ஒரே ஓவரில் சுப்மன் கில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ரோகித் சர்மா தனது பங்குக்கு ஜேக்கப் டப்பி, சான்ட்னெரின் ஓவர்களில் இரு சிக்சர் வீதம் பறக்கவிட்டு பிரமாதப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. 12.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100-ஐ தொட்டது.
இந்தியா 24.1 ஓவர்களில் அணி 200 ரன்களை கடந்தது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது 30வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
அதே ஓவரில் சுப்மன் கில் பவுண்டரி அடித்து 72 பந்துகளில் சதம் அடித்தார். தனது 21வது ஒரு நாள் போட்டியில் ஆடும் அவருக்கு இது 4வது சதமாகும். இந்த தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.







