குறிஞ்சிப்பாடி அருகே செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மர்மநபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அருள்மிகு செங்கழுநீர் மாரியம்மன் கோயில் உள்ளது. விழப்பள்ளம் பகுதி பொதுமக்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், சுமார் 20 சவரன் அளவிற்கு சுவாமிக்கு அலங்கரிக்கும் தங்க நகைகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலின் பின்பக்கம் உள்ள மதில் சுவர் வழியாக கோயிலின் உள்ளே நுழைந்து கோயில் கர்ப்ப கிரகத்தினை உடைத்து, 20 சவரன் அளவுள்ள சாமி நகையும், கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் உடைத்து உண்டியலில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதை அடுத்து நேற்று காலை கோயில் பூசாரி கோயிலின் முன்பக்க கதவை திறந்து பார்த்த பொழுது, கோயிலின் கர்ப்பகிரகத்தின் கதவு உடைக்கப்பட்டு, சாமி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து கோயில் தர்மகத்தாவிடம் தெரிவித்து பின்னர் காவல் துறையில் புகார் அளித்ததின் பேரில், குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கோயில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கோயிலின் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சௌம்யா.மோ






