கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழ்நாடு அரசு டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கே.என்.நேரு தரப்பில் தனது தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்ப்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகளின் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை, மறு ஆய்வு செய்யுமாறு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.




