அமித் ஷா குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி விடுதலை : உத்தரப் பிரதேச நீதிமன்றம் தீர்ப்பு!

அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை விடுதலை செய்து உத்தரப் பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, அப்போதைய பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக அவர் மீத உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இந்தப் வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 26-ம் தேதி, தீர்ப்பு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வழக்கில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் அவதூறானவை அல்ல என்று தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.