ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ நிலை அறிக்கை தாக்கல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சிபிஐ மறு வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ பதிந்த வழக்கு சென்னை பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்ட்ரேட் முன்பு விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்துறை வசம் இருந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் குற்றம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தியது, சாட்சிகளின் கூற்றுப்படி அங்கு இருந்த சூழல் மற்றும் தப்பித்த வழித்தடம் உள்ளிட்டவை எல்லாம் ஆய்வு செய்யப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது, சம்பவத்தை பார்த்த சாட்சிகளிடமும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டது, அனைத்து தரப்பினரும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கினர்.

குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ இதுவரை நடத்திய விசாரணை அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் அருள், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சிவா, விஜய், கோகுல் மற்றும் சந்தோஷ் ஆகிய 10 பேர் நேரடியாக கொலையில் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றவர்கள் ஆவர்.

பிற குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இந்த கொலையில் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் காண முடிகிறது. குறிப்பாக ஆயுதங்கள் வழங்கியது, நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வழங்கியது, பண உதவி செய்தது, வாகனம் ஏற்பாடு செய்தது, ஒருங்கிணைத்தது உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சம்பவம் செந்தில் மற்றும் மொட்டைக் கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டில் தலைமுறைவாகியுள்ளனர். அவர்களின் வங்கி பண பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற இவர்கள் இருவரும் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமீரகத்தில் இருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட நாகேந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதேவேளையில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வதம்மனை பொறுத்தவரை பிரதான குற்றவாளியான அருள் மற்றும் திருவேங்கடம் ஆகியோரை கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக சந்தித்து பேசி இருக்கிறார். அவர்களிடையே நடைபெற்ற தொலைபேசி தொடர்பு மற்றும் வங்கி பண பரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள நபர்களின் இணைய தரவுகள், கைப்பேசி உரையாடல் தரவுகள், வாட்ஸ் அப் தரவுகள், டிஜிட்டல் சிம், குறுஞ்செய்தி உள்ளிட்டவை தொடர்பாக சிபிஐ ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக முக்கிய சதிகாரர்கள் இடையே நேரடி டிஜிட்டல் தொடர்பை உறுதி செய்வதற்கும் அவர்களின் யாரேனும் நாட்டிற்கு வெளியே இருந்து செயல்பட்டு வந்தார்களா என்று கண்டறிவதற்கும் நேர குறிப்புகள் மற்றும் இணைய முகவரிகளை ஒப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலையுடன் தொடர்புடைய பரிவர்த்தனை முறைகளை கண்டறிவதற்காக குற்றச்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சிபிஐ தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
மாநில தடய அறிவியல் ஆய்வகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை சி.பி.ஐ முழுமையாக ஆய்வு செய்து வருகிறது.

புதிய தடயங்களை கண்டறிவதற்காக தேவைப்பட்டால் மறு பரிசோதனைக்கும் உட்படுத்தும் நோக்கில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி மற்றும் டிஜிட்டல் பொருட்களின் மீது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் சிபிஐ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த கொலையில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் சிபிஐ பாராபட்சமின்றி நடுநிலையான மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தி வருகிறது.

எனவே இந்த நிலை அறிக்கையை ஏற்றுக் கொண்டு, இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.