நீட் தேர்வு ரத்து தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்த்து பாஜக எம்எல்ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது முதலில் பேசிய பாஜக எம்.எல்.ஏ போஜராஜன், “எங்கள் நிலைப்பாடு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு , நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும். அது தமிழகம் மாணவர்களுக்கு ஊக்கத்தையும் எதிர்காலத்தையும் சிறப்பாக ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. பல்லடத்தில் தமிழ் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வு வெற்றி பெற்றுள்ளார்கள் திருப்பூர் மாவட்டத்தில் 141 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்

நீட் தேர்வு பயிற்சி முகாமினை ஏன் அரசு நடத்தக் கூடாது?. எல்லாம் மாநிலங்களில் எல்லா மாணவர்களும் வெற்றியோடு நீட் தேர்வில் இருக்கிறார்கள். ஆனால் நமது மாநிலத்தில் உள்ள மாணவர்களைப் பற்றி நாம் ஏன் தாழ்வு மனப்பான்மையோடு நினைக்க வேண்டும். அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் நமது குழந்தைகள் அறிவு ஜீவிகள் அவர்கள், யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை அவர்களுக்கு ஊக்கப்படுத்த வேண்டும்,

தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதனை பணம் கொடுத்து ஒரு தொழிலாக மாற்றி விட்டனர். பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் தனியார் கல்லூரியில் சேர்ந்து விடுவார்கள். பணம் இல்லாத ஏழை குழந்தைகளுக்கு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு. 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவர்கள் பலர் மருத்துவக் கல்லூரிகள் சேர்ந்து உள்ளார்கள். இது போன்ற ஒரு புதிய திட்டத்தை மாணவர்களுக்கு உபயோகமானதையும் உற்சாகப்படுத்தும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறேன்” என்றார்.

இதனைத்தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.