தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வரவேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “சமர்ப்பிக்கப்பட்டிருக்கக் கூடிய இந்தத் தீர்மானத்தை, எதிர்க்கட்சியின் சார்பில் முழுமையாக ஆதரிக்கின்றேன். அன்புத் தங்கை அனிதா தொடங்கி, பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதிகாரப்பூர்வமாக இந்தக் காரணத்திற்காக உயிரிழந்ததாகக் கணக்கிடப்படவில்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அநீதிக்கு எதிராக சமூக நீதியின் தாயகமான தமிழ்நாடுதான் முதன்முதலில் போர்க்குரல் எழுப்பியது. அந்தப் போர்க்குரல்தான் இன்று இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது.
எனவே, நிறைவேற்றப்படவுள்ள இந்தத் தீர்மானத்தை வெறும் சடங்குக்காக நிறைவேற்றிவிட்டோம் என்ற வரலாற்றுப் பதிவாக மட்டும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதே என்னுடைய யோசனை. முதலமைச்சர் அவர்கள், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு, இந்தியாவில் பாஜக ஆளாத பிற மாநிலங்களில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் முதலமைச்சர்களுக்கும், அங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கும் இந்தத் தீர்மானத்தை அனுப்பி, இதேபோன்ற ஒரு தீர்மானத்தை உங்கள் மாநிலங்களிலும் உள்ள சட்டப்பேரவைகளில் நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்த வேண்டும்.
ஏனென்றால், தமிழ்நாட்டிலிருந்து மட்டும் எழுப்பப்படும் குரலாக இது இருந்துவிடக் கூடாது. இந்த எதார்த்தத்தை நாடு முழுவதும் புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுவதும் இந்தக் கருத்தியலை வலிமைப்படுத்த வேண்டும். அந்தக் கருத்தியலை வலிமைப்படுத்துவதன் மூலமாகத்தான், நாடு முழுவதும் இந்தக் குரலைச் செம்மைப்படுத்தி, இந்தத் தீர்மானத்தின் நோக்கத்தை வெற்றியடையச் செய்ய முடியும் என்ற யோசனையை நான் முன்வைக்கின்றேன்.
தற்போது, இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி நான்கு பேர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஏழாவது நாள். அவர்களுடைய உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் இணைந்து, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்த அவையின் சார்பாக அவர்களை நேரில் சந்தித்து, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தெரிவித்து, அவர்களுடைய பட்டினிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்
சிலர் இந்த நீட் தேர்வை ஆதரிக்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய மழுப்பலான காரணங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீட் எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.




