ரெம்டெசிவர் மருந்தை மருத்துவமனைகளுக்கு, நேரடியாக வழங்க முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,11,170 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,077 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் புதிதாக 3,11,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 2.46 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4,077 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சென்னையில் நாட்கணக்கில்,ரெம்டெசிவர் மருந்திற்காக பலர் காத்திருக்கும் நிலை காணப்பட்டது. மேலும், சென்னையில் ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், ரெம்டெசிவர் மருந்திற்காக மணிக்கணக்கில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் நிலையை போக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, ரெம்டெசிவரை மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.




