கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து வழங்கினால்தான் பிழைக்க முடியும் என்ற பொய்யான நிலையை சில மருத்துவர்கள் உருவாக்குவதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் ரெம்டெசிவர் மருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வந்ததாகவும், இன்று முதல், நேரு விளையாட்டு அரங்க ஆண்கள் விடுதியில் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக 4 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் 300 பேருக்கு தினம்தோறும் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட உள்ளதாகவும், அரசு மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தாலும் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே ரெம்டெசிவிர் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்து அல்ல என தெரிவித்த அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக சில மருத்துவர்கள் ரெம்டெசிவரை பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரெம்டெசிவிர் மருந்தை ஒரு நோயாளிக்கு எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனம் தேவை என்று குறிப்பிட்ட அவர், நோயாளிக்கு ஆரம்ப நிலையிலோ , கடைசி நேரத்திலோ ரெம்டெசவிர் வழங்குவதால் எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்தார்.







