சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் கொரோனா நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தான ரெம்டெசிவர் விற்பனை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவர் மருந்து விற்பனைச் செய்யப்பட்டு வந்தது. அங்கு ரெம்டெசிவர் மருந்தினை வாங்க ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். இதனால் மருந்துவமனையில் நோயாளிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் பணிகள் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ரெம்டெசிவர் மருந்து விற்பனை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் சார்பில் ரெம்டெசிவர் மருந்துகளை விற்பனைச் செய்து வருகின்றனர். டோக்க முறையில் ஒரு நாளைக்கு 300 நபர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவர் மருந்து விற்பனைச் செய்யப்படும் என மருத்துவ கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நேற்று இரவு முதலே ரெம்டெசிவர் மருந்தினை வாங்க ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேரு விளையாட்டு அரங்கத்தின் வெளியே காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் தினமும் அதிகரித்து வரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ரெம்டெசிவர் மருந்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அந்த மருந்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும். மருந்தின் தேவை உள்ள அனைவரும் ரெம்டெசிவர் கிடைக்க வழிவகைச் செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோல் திருச்சியிலும் ரெம்டெசிவர் மருந்து வாங்க நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.







