தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோவை மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்காக, காலை முதலே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கு குவிந்தனர். ஆனால், நீண்ட நேரமாக காத்திருந்தவர்களுக்கு மருந்து வழங்கப்படவில்லை. உரிய முறையில் டோக்கனும் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல், சேலம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியிலும் ரெம்டெசிவர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 500 பேருக்கும் அதிகமானோர் காத்திருந்த நிலையில், 40 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருந்து தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீல் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து வாங்குவதற்காக தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவு மக்கள் குவிந்தனர். 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த நிலையில், மருந்து விற்பனை நடைபெறாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையே, மதுரை அரசு மருத்துவமனையில் அதிகாலை முதலே ரெம்டெசிவர் மருந்து வாங்க கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் காத்திருந்தனர். உரிய ஆவணங்களுடன் சென்றவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு 6 பாட்டில்கள் என்ற கணக்கில் மருந்துகள் விற்கப்பட்டன.







