முல்லைப் பெரியாறு அணை 137.50 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ள நிலையில் “ரூல் கர்வ்” முறைப்படி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக கேரள பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 534 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 136 அடியை எட்டிய போது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த காலங்களை போல் இரவில் நீர் திறப்பதை தவிர்க்குமாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இதுபோலவே முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் 137.50 அடியை எட்டியதை தொடர்ந்து V2,V3,V4 மதகுகள் வழியாக கேரளா பகுதிக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கேரளா பகுதியான வல்லக்கடவு, பீர்மேடு, சப்பாத்து, ஐயப்பன் கோயில் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் சம்பவ இடத்தில் இருந்து வெள்ளப் பகுதியை பார்வையிட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகமாகும் போது மேலும் சட்டர்கள் திறக்கப்பட்டு அதிக அளவில் நீர் திறக்கப்படும் என்ற சூழலில் கேரளப் பகுதியில் உள்ள வல்லக்கடவு, பீர்மேடு, சப்பாத்து, ஐயப்பன் கோயில் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழு, தீயணைப்பு துறையினர், நீர்வளத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.