இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி இடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாகவும், 2022ம் ஆண்டில் ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா? எனவும் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட்,
ஒவ்வொரு ஆண்டும் ராணுவம், கடற்படை, விமானப்படை என பாதுகாப்புத் துறையில் 60,000 காலிப் பணியிடங்கள் உருவாகின்றன. இதில், 50,000 காலிப் பணியிடங்கள் ராணுவத்தில் மட்டும் உருவாகுவதாகவும், இத்தகைய பணியிடங்களை நிரப்புவதற்கு ஆண்டுதோறும் ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடத்தாததால் 1,08,685 ராணுவ வீரர்கள் பற்றாக்குறை இந்திய ராணுவத்தில் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் வரும் ஆண்டுகளில் காலிப் பணியிடங்கள் வெகுவாகக் குறையும் எனவும் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








