இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

பத்திரப்பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.25,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட சீராய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர்…

பத்திரப்பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.25,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட சீராய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு பதிவு மாவட்டங்களுக்கான பதிவுத்துறை சீராய்வுக்கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்த இக்கூட்டத்தில், பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், பத்திரப் பதிவுத்துறை துணைத்தலைவர் ஜாபர் சாதிக், மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சீராய்வுக்கூட்டத்திற்குப் பின் அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முதல்வர் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற, அரசின் வருவாயை உயர்த்த வேண்டும் எனக்கூறினார். அதன்படி கடந்தாண்டு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையில் ரூ.1.51 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்தாண்டு பதிவுத்துறையில் ரூ. 25,000 கோடியும், வணிக வரித்துறையில் ரூ.10,032 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இருந்தபோதும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மற்றும் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையில் வருவாயை அதிகரிக்க மண்டலவாரியாக சீராய்வுக்கூட்டம் நடத்தி வருகிறோம். அதேசமயம் பொதுமக்களிடம் நல்ல அணுமுறையுடன் நடந்து கொள்ளவும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான நடவடிக்கைகளால் போலிப்பத்திரப்பதிவு ஒழிந்திருக்கிறது. கடந்த காலங்களில் இருந்த போலிப்பத்திரம் குறித்த புகார் அளித்தால் இருதரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலி பத்திரப்பதிவு புதிய சட்டத்தின்படி இதுவரை 3,000 போலிப் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்ற விதி உள்ளது. பத்திரப் பதிவில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தரகர்கள் மூலம் பதிவுத்துறையில் தவறு நடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு செய்பவர்கள் அவர்களே வந்து அலுவலகத்தில் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வசதிக்காக பத்திரப்பதிவுத்துறையில் அனைத்தும் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.