பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மணவாடியை அடுத்த கல்லுமடை மருதம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காளிமுத்து. இவரது 13 வயதான இளைய மகன் நித்திஷ், திண்டுக்கல் மாவட்டம் கூம்பூரை அடுத்த கொண்டமநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த இவர் குலதெய்வ கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
நேற்று முதல் நாள் இரவு தனது தாய், தந்தையிடம் தனக்கென்று புதிதாக செல்போன் வேண்டும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தங்களிடம் பணம் இல்லை என்றும், பின்னர் வாங்கி தருவதாக கூறி சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று பெற்றோர் உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்க கரூர் சென்றுள்ளனர். தனது அண்ணன் திவாகர், வீட்டிற்கு அருகில் வெளியில் சென்ற நிலையில், தனியாக இருந்த மாணவன் நித்திஷ் தூக்குப் போட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
வீட்டிற்கு அருகில் வெளியில் சென்ற அண்ணன் திவாகர் வீடு திரும்பிய போது, தம்பி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் இருப்பவர்களிடம் தகவலை கூறி, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனுக்காக 13 வயது சிறுவன் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







