தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷேச நாட்களில் வாழ்த்து சொல்வது என்பது தமிழர் மரபின் ஓர் அங்கம். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்ள நாம் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் ஓர் வழக்கம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு சென்ற ஆண்டும் வாழ்த்து சொல்லவில்லை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
திமுக தலைவராக நீங்கள் வாழ்த்து சொல்வதும், சொல்லாமல் இருப்பதும் கொள்கை ரீதியில் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் நீங்கள் இப்போது அனைத்து தரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரஜை. கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருப்பது ஏற்புடையது அல்ல.
தமிழகத்தில் பெருவாரியாக கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பது அந்த மக்களை ஒதுக்குவது போன்ற செயலாகும் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்வார் என்பதே எங்கள் நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார்.







