தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் பாடல்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் நடித்து பிரபலமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனக்கே உரிய தனித்துவமான முக பாவனைகளை வெளிப்படுத்திய இவருக்கு தென்னிந்திய சினிமாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா, ’மிஷன் மஜ்னு’ என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், மிஷன் மஜ்னு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ராஷ்மிகா, “பாலிவுட்டில் அதிகமான ரொமாண்டிக் பாடல்கள் வெளிவருகின்றன. ஆனால் தென்னிந்திய சினிமாவில் மசாலா பாடல்கள், குத்துப் பாடல்கள் மற்றும் கவர்ச்சிப் பாடல்களே அதிகம் இடம்பெறுகின்றன. மிஷன் மஜ்னு படத்தில் இடம்பெற்றுள்ள எனது முதல் ஹிந்தி பாடல் ரொமாண்டிக் பாடலாக உருவானதில் மகிழ்ச்சி. அதனை கேட்க ஆவலாக உள்ளேன் ” என்று தெரிவித்தார். இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவர்ச்சிப் பாடல்கள் உள்ளதா? பாலிவுட் சினிமாவில் இல்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ராஷ்மிகா நேரத்திற்கு ஏற்றார்போல பேசுவதாகவும், பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளை பெறுவதற்கே இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருப்பதாகவும் இணையவாசிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ராஷ்மிகாவுக்கு எதிர்மறை விமர்சங்கள் குவிந்தாலும், அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் காந்தாரா திரைப்படம் வெளியானபோது ராஷ்மிகா தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. கன்னட சினிமாவை புறக்கணிக்கும் விதமாக அவர் பேசியதாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.







