ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோவை தொடர்ந்து தற்போது நடிகை கத்ரீனா கைஃபின் போலி வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து மார்பிங் செய்த, வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலியாக மார்பிங் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலான நிலையில், deep fake தொடர்பான விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் deep fake-ஐ கையாள்வதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் அவசரத் தேவை உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் Deep Fake என்ற செயலி. இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும். இதை பயன்படுத்தி ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். சமீபத்தில் கூட தமிழ் பாடல்களை பிரதமர் மோடியின் குரலில் மாற்றி அதனை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வந்தன.
இந்நிலையில், இன்று நடிகை கத்ரீனா கைஃப் இந்த போலி வீடியோ சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் நடித்த டைகர் 3 படத்தில் டவல் அணிந்து ஒரு சீனில் நடித்துள்ளார். அந்த சீனை AI மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் சிலர் பரப்பி வருகின்றனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட மற்றும் போலியான படம் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டும் விதமாக இனி போலி வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







