நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி 2898 ஏடி படக்குழு ஒரு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசன் அடுத்ததாக ‘ பாகுபலி ‘ பிரபாஸ் நடிக்க இருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இந்த படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஆறு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. ’நடிகையர் திலகம்’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளான இன்று சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
https://twitter.com/VyjayanthiFilms/status/1721809786549715376
இந்நிலையில், அவர் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். முன்னதாக, இந்தியன் – 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படங்களின் முன்னோட்ட விடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.







