தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேரையும், 10 விசைப்படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்கக் கூறி, மீனவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் 5-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த 5 நாட்களாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், மண்டபம் பகுதியில் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டமும், பாம்பன் பகுதியில் 2-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.








