ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உலகப்புகழ் பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றாகும். தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் தங்களின் முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பது ஆன்மிகவாதிகளால் நம்பப்படுகிறது. ஆடி,தை,புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் மாத,மாதம் வரும் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து தர்ப்பணம் செய்து 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.பக்தர்களின் வருகையினால் ராமேஸ்வரம் திருவிழா போல் காட்சியளித்தது.திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
வேந்தன்







