9 தலை நாகவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த வைகுண்ட பெருமாள்!

வைகாசி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் 9 தலை நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும்…

வைகாசி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் 9 தலை நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும்
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் மூன்று நிலைகளில்
காட்சி தருவதாக கூறப்படுகிறது.

கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இத்திருக்கோயில் தொல்பொருள்
துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று கருடன் மற்றும் அனுமந்த வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தார்.

நான்காம் நாளான இன்று 9 தலை நாக வாகனத்தில் வைகுந்தவல்லி சமேத வைகுண்ட
பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வைகுண்ட வள்ளிக்கு பச்சை
மற்றும் சிவப்பு நிற பட்டாடையும் ,. அரக்கு மற்றும் ரோஸ் நிற பட்டாடைகளை
வைகுண்ட பெருமாளுக்கு உடுத்தி சுவாமிகளுக்கு திருவாபரணங்கள் சூடி பலவண்ண
நிறங்களால் ஆன மாலை அணிவித்து சுவாமி மிகவும் ரம்மியமாக காட்சியளித்தார்.

மேலும் தங்க தாமரையின் மேல் சுவாமி வீற்றிருப்பது போல் அமைக்கப்பட்டு மிகவும்
சிறப்பாக காணப்பட்டது. ஒன்பது தலை நாக வாகனத்தின் மேல் தாமரை மலர்கள் சூடிய
மாலைகள் அணிவிக்கப்பட்டு அழகாக இருந்தது. கோயிலில் இருந்து புறப்பட்டு 4 ராஜ வீதிகளின் வழியே வலம் வந்த பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.