ராமர் கோயில் பிரதிஷ்டை விழா: சோனியா காந்தி, மன்மோகன் சிங்குக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு  விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த…

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு  விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில்,  கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக பாஜக தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.  இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர்கள் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.  இதனைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வருவதால்,  அவரது வீட்டுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

அதுபோல,  முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  முன்னாள் பிரதமர் தேவ கௌடா,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி,  இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோருக்கும்  அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,  இந் நிகழ்வில் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் தரப்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.