ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சிறப்பைப் பெற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வால், தோனியிடம் தனது பேட் மற்றும் ஜெர்சியில் கையெழுத்து பெறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா ஈடன் கார்டர்ன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. பின்னர் 150 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து எதிரணியை கதிகலங்கச் செய்தார். தொடர்ந்து பந்துகளை பறக்கவிட்ட அவர், வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் (50 ரன்கள்) அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
https://twitter.com/iamJaiswal19/status/1656958219833729026
இதையடுத்து யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெய்ஸ்வால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியை சந்தித்துள்ளார். மேலும் அவரிடம் தனது பேட் மற்றும் ஜெர்சியில் ஆட்டோகிராஃபும் வாங்கியுள்ளார். தோனியிடம் தனது ஜெர்சியில் கையெழுத்து வாங்குவது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெய்ஸ்வால், “என்ன ஒரு தருணம், லெஜண்ட் தோனி உடனான சந்திப்பு. எனது பேட்டில் அவரது கையெழுத்தைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. அவர் எப்போதுமே ஒரு முன்மாதிரி வீரர்” என்று பதிவிட்டுள்ளார்.







