பருவ மழை வந்தால் மழைநீர் வடிகால்களின் பணி வெட்ட வெளிச்சமாகிவிடும் – ஜெயக்குமார் சாடல்

மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக அரசு தெரிவிக்கும் நிலையில், பருவ மழை வந்தால் மழைநீர் வடிகால் பணிகள் வெட்ட வெளிச்சமாகி விடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   சென்னை…

மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக அரசு தெரிவிக்கும் நிலையில், பருவ மழை வந்தால் மழைநீர் வடிகால் பணிகள் வெட்ட வெளிச்சமாகி விடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

சென்னை ராயபுரம் எம் சி சாலை பகுதியில் செயல்படும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆயுத பூஜையை கொண்டாடினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா செயல்படுத்திய திருமண நிதியுவித் திட்டம் சிறப்பான திட்டம். அதை திமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது மாணவிகளுக்கான நிதியுதவி திட்டம் யானைப்பசிக்கு சோளப்பொறி போல தான். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் கூட அதில்
பலன் பெற முடியவில்லை என சாடினார்.

 

அதிமுக அரசு அறிவித்த இலவச திட்டங்களில் கூட இலவசம் என்பதற்கு பதில் விலையில்லா என்ற வார்த்தையை தான் ஜெயலலிதா பயன்படுத்தினார். ஆனால் இன்று
அமைச்சர் ஓசி என்கின்றனர். ஓசி எனக் கூறிய அமைச்சர் பொன்முடியையும், மேயரை மரியாதைக்குறைவாக நடத்திய அமைச்சர் நேருவையும் முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் என்றார்.

திமுக மக்கள் பிரதிநிதிகள் யாரும் முதலமைச்சரை மதிப்பதில்லை. அமைச்சர்கள் மத்தியில் கேலி கிண்டல்கள் அதிகமாகிவிட்டன. அதை அழைத்து கண்டிக்காமல் அறிக்கை விடுகிறார் முதலமைச்சர் என கூறினார். திமுக ஆட்சியில் அடாவடி, அராஜகம், அத்துமீறல்கள்தான் நடந்து வருவதாக குற்றம்சாட்டினார். மக்கள் பிரச்சனைகளுக்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியது யார்? என கேள்வி எழுப்பிய அவர், ஓபிஎஸ் அறிக்கை, டிவிட்டரை தான் நம்புகிறார் தொண்டர்களை அல்ல என தெரிவித்தார்.

 

ஓபிஎஸ் எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ அதே குடும்பத்திடம் காலில் விழுந்து முதலமைச்சராக்குங்கள் என கேட்கிறார். மு.க.ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ் – சசிகலா – டிடிவிக்கும் இடையே அதிமுகவை அழிக்க வேண்டும் என எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் 80% முடிவடைந்து விட்டதாக கூறுகிறார் முதலமைச்சர். ஆனால், பருவ மழை வந்தால் மழைநீர் வடிகால்களின் பணி குறித்த நிலை வெட்ட வெளிச்சமாகிவிடும் என ஜெயக்குமார் விமர்சித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.