சென்னையில் மழைநீர் ஓடவில்லை; அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்- ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் பெய்த மழைக்கு, மழைநீர் ஓடவில்லை. அமைச்சர்கள் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை இயல்வை விட 38…

சென்னையில் பெய்த மழைக்கு, மழைநீர் ஓடவில்லை. அமைச்சர்கள் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம்
கூறுகையில், வடகிழக்கு பருவமழை இயல்வை விட 38 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை கூடுதலாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் பெய்த கணமழையின் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய மழைக்கே சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வடகிழக்கு பருவ மழையை எதிர்க் கொள்ள
தமிழகம் தயாராக இருக்கிறதா என கேள்வி எழுகிறது என்றார்.

சென்னை மழை நீர் வடிகால் திட்டம் அரைகுறையான அரை வேக்காட்டு திட்டமாக இருக்கின்றது. அதிமுக ஆட்சியில் 3600 இடங்களாக தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து இருந்த இடங்கள் 40 இடங்களாக குறைத்தோம். மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சென்னையில் பெய்த மழைக்கு அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை. தமிழக அரசு தொடர் கண்காணிப்பு பணியில் இருந்து தவறியதால் மழை நீர் தேங்கி நிற்பதாக குறிப்பிட்டார்.

சென்னையில் நடப்பு ஆண்டில் 1,588 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள்
நடைபெறுகின்றது. மழை காலங்களில் அரசு துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லை.
முதலமைச்சர் ஆய்வு செய்த இடத்தின் அருகில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. ரோடு
எது, பள்ளம் எது என தெரியாமல் மக்கள் குழம்பி நிற்கிறார்கள். ஒரு சில இடங்களில் அவசர கதியில் மழை நீர் வடிகால் பணிகளை முடித்துள்ளார்கள். சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு முடிந்துள்ளது என அதிகாரிகளுக்கே தெரியவில்லை. கேட்டால் 90% சதவீதம் முடிந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் 40 % மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளதாக தான் தெரிவதாக அவர் கூறினார்.

மேலும், மழை, வெள்ளப் பாதிப்புக்களை தடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு வெளியிடப்பட வேண்டும். சென்னை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. தமிழக அரசின் அலட்சியமற்ற, தரமற்ற நிலையை பார்க்க முடிகின்றது. வட கிழக்கு பருவ மழையால் கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்படும். பருவமழைக் காலங்களில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தின் உண்மையான கள நிலவரத்தை முதலமைச்சர் வெளியிட வேண்டும். அறிக்கை மட்டுமே தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. களத்தில் செயல்படவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.