கடந்த சில நாட்களாக மரக்காணம் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால், உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் 3500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடற்கரையோர பகுதிகளில் உப்பளங்கள் அமைத்து உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 3,500 ஏக்கா் பரப்பில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உப்பளத் தொழிலாளா்கள் பாத்தியிட்டு, கடல் நீரை தேக்கி உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்தத் தொழிலில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் மரக்காணம் உள்ளது.
இந்நிலையில், வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்று திசை மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக இரவு நேரங்களில் தொடா் மழை பெய்து வந்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக மரக்காணம் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால், உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பிரதமர் மோடியின் திருமண புகைப்படம் என பகிரப்படும் பதிவு உண்மையா?
குறிப்பாக, ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் உப்பு உற்பத்தி பணி தொடா்ந்து, செப்டம்பா் மாதம் வரை நடைபெறும். மழை பெய்யாமல் இருந்தால் தொடா்ச்சியாக நடைபெறும். இங்கு ஆண்டுக்கு 25 லட்சம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வேதாரண்யத்தைக் காட்டிலும் மரக்காணத்தில் நிகழாண்டில் உப்பு உற்பத்தி நல்ல முறையில் இருந்ததாக உப்பளத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.








