லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி

லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை…

லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாயினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பாஜவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ரா அந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜரான ஆசிஷ் மிஸ்ரா, கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதற்கிடையே, இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்த கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் குடியரசு தலைவரை நாளை காலை 11 மணிக்கு சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.