பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில், “தூய்மை கரூர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை, அமைச்சர் செந்தில் பாலாஜி நகராட்சி அதிகாரிகளுடன் வீதி வீதியாக சென்று ஆய்வு செய்தார். அந்தப்பகுதி பொதுமக்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 மாத காலத்தில் 3 ஆயிரத்து 550 தெருவிளக்குகள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 100 மீட்டர் தொலைவில் புதிதாக 2,300 தெரு விளக்குகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன.
அனல்மின் நிலையங்களில் 2016 முதல் 2018 வரை 58 சதவீதமாக இருந்த மின் உற்பத்தியில், கடந்த ஆட்சிக்காலத்தில் 4320 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நிலையில், 1800 மெகாவாட் உற்பத்தி மட்டுமே நடைபெற்றது. திமுக ஆட்சியில் 3 ஆயிரத்து 500 மெகாவாட் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது 70 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.