இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை வரும் ராகுல் காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். அதன்படி இன்று தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வருகிறார்.
அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவை, திருப்பூர், ஈரோடு, காங்கேயம், தாராபுரம், கரூர், திண்டுக்கல் என வரும் 25ஆம் தேதி வரை ராகுல் காந்தி மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

ஏற்கெனவே கடந்த வாரம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கலந்துகொண்டார். பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மக்களோடு மக்களாக அமர்ந்து விருந்து உண்டார். ராகுல் காந்தியின் வருகை தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருத்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் இன்று தமிழகத்திற்கு வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







